Archives: டிசம்பர் 2021

கிறிஸ்மஸ்க்கு ஒருநாள் நெருக்கத்தில்

“கிறிஸ்மஸ் முடிந்து விட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று என்னுடைய மகள் மனமுடைந்து கூறினாள். 

அவள் எப்படி உணருகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது: கிறிஸ்மஸ்க்கு பின்பு மந்தமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. பரிசுகள் எல்லாம் பிரித்துப் பார்க்கப்படும். வண்ண விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். விடுமுறையற்ற ஜனவரி மாதம் வந்துவிடும். பல எதிர்பார்ப்புகளுடன் வரும் அடுத்த கிறிஸ்மஸ் வெகு தூரத்தில் இருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்மஸ் ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, “காலண்டர் என்ன தேதி வேண்டுமானாலும் காட்டட்டும். ஆனால் நாங்கள் எப்போதுமே கிறிஸ்மஸ்க்கு ஒரு நாள் நெருக்கத்தில் இருக்கிறோம்” என்பதை உணர்ந்தேன். அதை நான் அடிக்கடி சொல்ல பழகிக்கொண்டேன். 

காலத்திற்கு உட்பட்ட நம்முடைய சரீரப் பிரகாரமான கொண்டாட்டத்திற்கு பின் இருக்கும் ஆவிக்குரிய யதார்த்தம் மிகவும் முக்கியமானது: இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்த இரட்சிப்பு மற்றும் அவர் மீண்டும் வருவார் என்னும் நம்பிக்கை. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து காத்திருங்கள் என்று வேதம் அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது. பிலிப்பியர் 3:15-21ல் சொல்லுவது எனக்கு பிடித்தமானது. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிற (வச. 19) உலகத்தின் வாழ்க்கைமுறையும் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையும் முரண்படுத்தப்படுகிறது: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (வச. 20).

பரலோகத்திலிருக்கிற நம்முடைய குடியிருப்பானது நாம் என்ன நம்புகிறோம் என்பதையும், எப்படி வாழுகிறோம் என்று எல்லாவற்றையும் மாற்றுகிறது. இயேசுவின் வருகைக்கு ஒரு நாள் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு, நம்முடைய நம்பிக்கையை உறுதியாக்குகிறது. 

பொன்னிலும் சிறந்தது

அமெரிக்காவின் பெரிய தங்கவேட்டை நடந்த நாட்களில், கலிபோர்னியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட எட்வர்ட் ஜாக்சன், மே 20ம் தேதி 1849இல் தன்னுடைய டைரி குறிப்பில், வியாதினாலும் மரணத்தினாலும் குறிக்கப்பட்ட அந்த கொடுமையான வேகன் பயணத்தைக் குறித்து புலம்பியிருக்கிறார். “என்னுடைய எலும்புகளை இங்கு விட்டுச்செல்லாதீர்கள்; முடிந்தால் அவற்றை வீட்டிற்கு கொண்டுசெல்லுங்கள்” என்று அவர் எழுதியிருக்கிறார். தங்கவேட்டையில் ஈடுபட்ட ஜாண் வாக்கர் என்னும் வேறொரு நபர், “நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு இங்கு பொக்கி~ங்கள் இருக்கிறது... ஆனால் யாரும் இங்கே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

வாக்கர் பின்நாட்களில் வீடு திரும்பி, விவசாயத்தில் ஈடுபட்டு, கடைசியில் மாநில தேர்தலில் வெற்றிபெற்றார். வாக்கரின் பழைய கடிதங்களை அவருடைய வீட்டார், “ஆன்டிக்ஸ் ரோட்ஷோ” என்னும் அமெரிக்காவின் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு கொண்டுபோனபோது, அவைகள் அங்கு பல மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “அவர் தங்க வேட்டையைக் காட்டிலும் விலைமதிக்கமுடியாத கடிதங்களை அங்கிருந்து எடுத்துள்ளார்” என்று கூறினாராம். 

வாக்கரும் ஜாக்சனும் அந்த தங்க வேட்டையிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொண்டு வீடு திரும்பி, நடைமுறை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டனர். “ஞானத்தைக் கண்டடைகிற மனு~ன்... பாக்கியவான்... அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம்” (நீதிமொழிகள் 3:13,18) என்று ஞானத்தைக் குறித்த சாலமோனின் வார்த்தைகளை பார்க்கிறோம். “அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது” (வச. 14) என்று பூமியின் அனைத்து காரியங்களைக் காட்டிலும் ஞானம் விலையேறப்பெற்றதாய் முன்வைக்கப்படுகிறது (வச. 15).

“அதின் வலதுகையில் தீர்க்காயுசும், ... அதின் பாதைகளெல்லாம் சமாதானம்” (வச. 16-17). கண்ணைப் பறிக்கும் காரியங்களை விட்டுவிட்டு ஞானத்தை தெரிந்துகொள்வதே நம்முடைய சவால். இதுவே தேவனுடைய ஆசீர்வாதமான பாதை. 

சிங்கம், ஆடு, இரட்சகர்!

நியூயார்க் பொது நூலகத்தின் வாயிலை கவனிப்பதுபோன்று இரண்டு கல்லால் ஆன சிங்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மார்பிள் கற்களால் செதுக்கப்பட்ட அந்த சிங்கங்கள், 1911ஆம் ஆண்டு நூலகம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கிருக்கிறது. அந்த நூலகத்தின் ஸ்தாபகர்களை கனப்படுத்தும் விதத்தில், துவக்கத்தில் அந்த சிங்கங்களுக்கு லியோ லெனாக்ஸ் என்றும் லியோ அஸ்டர் என்று பெயரிடப்பட்டது. ஆனால் நியூயார்க்கின் கடினமான ஒரு காலகட்டத்தில், அதின் மேயர் ப்யோரெல்லா லகார்டியா, அந்த சிங்கங்களுக்கு வலிமை மற்றும் பொறுமை என்று பெயர் மாற்றினார். நியூயார்க் மக்களுக்கு அவை இரண்டு அந்த சவாலான தருணத்தில் அவசியம் என்று கருதினார். அந்த சிங்கங்கள் இன்னும் வலிமை மற்றும் பொறுமை என்றே அழைக்கப்படுகிறது. 

வேதாகமம் ஜீவனுள்ள, வலிமையான, கடினமான தருணங்களில் உற்சாகத்தை கொடுக்கும் சிங்கத்தைப் பற்றி நமக்கு அறிவிக்கிறது. அந்த சிங்கம் பல நாமங்களால் அறியப்பட்டுள்ளது. தன்னுடைய பரலோக தரிசனத்தில் அப்போஸ்தலர் யோவான், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் மீட்பையும் கொண்டுள்ள யாராலும் திறக்ககூடாத ஒரு முத்திரை புஸ்தகத்தைப் பார்க்கிறார். அப்போது, “நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று யோவானுக்கு சொல்லுகிறார் (வெளி. 5:5). 

அடுத்த வசனத்தில் யோவான் புதிதான ஒன்றை காண்கிறார்: “இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு... மத்தியிலே நிற்கக்கண்டேன்” (வச. 6). சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒரே நபர்: இயேசு. அவரே வெற்றிசிறக்கும் ராஜா. அவரே “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29). அவருடைய பெலத்தினாலும் சிலுவையினாலும் நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்கிறோம். எனவே அவர் நித்தியமானவர் என்னும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் நாம் வாழலாம்.

நாம் தேவனை நம்புகிறோம்

வினிதாவுக்கு குழந்தை பிறக்க இன்னும் ஆறு வாரங்கள் இருந்தபோது, கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய கொலஸ்டாஸிஸ் என்ற கல்லீரல் நோய் பிரச்சினை அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வினிதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்னும் 24 மணி நேரத்தில் குழந்தை வெளியே வந்துவிடும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், மருத்துவமனையின் மறுபக்கத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அதனால் வினிதாவை பராமரிக்கமுடியாமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அவள் தேவன் மீதும் அவருடைய திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடிவு செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வேதம் நம்மில் வேரூன்றும்போது நாம் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிகளை அது முற்றிலும் மாற்றுகிறது. எரேமியாவின் நாட்களில், மக்கள் மனிதர்களையும் விக்கிரகங்களையும் நம்பி வாழ்ந்தனர். தீர்க்கதரிசி இருவேறு மனிதர்களைப் பற்றிய வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார். “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5). “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்... மரத்தைப் போலிருப்பான்” (வச. 7-8). 

நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காய் நாம் அவரை விசுவாசத்தில் சார்ந்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் நமக்குத் தேவையான பெலத்தைத் தருகிறார்.

சிறந்த ஞானமும் ஆயிரம் கண்களும்

“ஆத்துமாவின் நிலையை அனைத்து கோணங்களிலும் அலசுவதற்கு, ஒரு மேய்ப்பனுக்கு தேவனுடைய ஞானமும் ஆயிரம் கண்களும் தேவை” என்று திருச்சபை தலைவரான ஜாண் கிறிஸாஸ்டம் எழுதுகிறார். ஆவிக்குரிய ரீதியில் மற்றவர்களை நன்கு பராமரித்தல் எப்படி என்பது குறித்த விவாதத்தில் கிறிஸாஸ்டம் இப்படியாக பேசுகிறார். ஒருவரைக் கட்டாயப்படுத்தி குணமாக்குவது என்பது சாத்தியமில்லை என்பதினால், அவர்களை கரிசணையோடும் இரக்கத்தோடும் அவர்களின் இருதயத்தை அணுகுவதை அவர் வலியுறுத்துகிறார். 

அதற்காக வலியே இல்லாமல் அதை மேற்கொள்ள முடியும் என்று அர்த்தமல்ல என்றும் கிறிஸாஸ்டம் எச்சரிக்கிறார். ஏனெனில் “ஆழ்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய ஒரு நபரிடம் நீங்கள் மென்மையாய் நடந்துகொண்டு, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யத் தவறினால் அவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் விரக்தியிலிருக்கும் அவரது உடம்பில் நீங்கள் இரக்கமின்றி கீறல் ஏற்படுத்தி சிகிச்சை செய்தால்... அவர் எல்லாவற்றையும் மறந்து, உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிப்பார்.”

கள்ள போதகர்களால் துன்மார்க்கத்திற்குள் தள்ளப்பட்டவர்களின் நடத்தையை விவரிக்கும் யூதாவும் அதே பிரச்சனையை சந்திக்கிறார் (1:12-13, 18-19). அந்த வகையான மரண அச்சுறுத்தல்களின்போதும், யூதா கோபப்படாமல் கையாளுவதற்கே அறிவுறுத்துகிறார்.

அதற்கு பதிலாக, விசுவாசிகள் அச்சுறுத்தல்களை சந்திக்க தேவனுடைய அன்பில் இன்னும் அதிகமாய் வேரூன்றவேண்டும் என்று போதிக்கிறார் (வச. 20-21). நாம் தேவனுடைய அன்பில் ஆழமாய் வேரூன்றும்போதே, சரியான நேரம், தாழ்மை மற்றும் இரக்கத்தோடு மற்றவர்களுக்கு உதவிசெய்யும் ஞானத்தை தேவனிடத்திலிருந்து பெறக்கூடும் (வச. 22-23). இந்த பாதையே, மற்றவர்களுக்கு சுகத்தை அடையச்செய்து, தேவனுடைய அன்பின் மகத்துவத்தில் இளைப்பாறச் செய்கிறது. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு

மிகவும் சிரமப்பட்டு, மருத்துவ மாணவியான கிருபா, ஒரு கிராமத்தைச் சேர்ந்த சூம்பின விரல்களுடைய ஒரு மூதாட்டியை மருத்துவ முகாமுக்கு வரும்படி சம்மதிக்க வைத்தாள். அங்கு ஒரு மூத்த மருத்துவர் அவளைப் பார்த்து, சில மருந்துகளைக் கொடுத்தனுப்பினார். அவள் பின்னர் கிருபாவைத் தனியாக அழைத்து, “அவர்களுடைய குறைபாடுகள் மிகவும் கடுமையானவை, நாம் ஒன்றும் செய்ய முடியாது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முன் ஏதாவது செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

சீரடைவதற்கான நம்பிக்கை மருத்துவத்தில் எப்போதும் இல்லை என்ற கசப்பான உண்மையை கிருபா படித்துக்கொண்டாள். ஆனால் இந்த நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் கூட, இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவகிருபையில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆவிக்குரிய நோயின் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இஸ்ரவேல் இருந்தபோது, ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார். நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுவதால் இஸ்ரவேல் அழிக்கப்படும் என்றும், ஜனங்கள் சிறைப்பட்டுப்போவார்கள் என்றும் கூறினார் (வ.12). கிமு 722 இல் இஸ்ரவேல் ஜனங்கள் அசீரியாவுக்கு சிறைப்பட்டுப் போனபோது ஆமோஸின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது (2 இராஜாக்கள் 17:6). இருப்பினும், ஆமோஸ் அழிவை முன்னறிவித்தபோது, அவர் நம்பிக்கையையும் அளித்தார். “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.6) என்றார். எப்படி என்பதை விளக்க, “நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்” (வ.15) என்றார். அவர்கள் இதைச் செய்தால், அவர்கள் பிழைப்பார்கள், தேவனின் பிரசன்னம் மற்றும் இரக்கத்தை அனுபவிப்பர் என்று ஆமோஸ் கூறினார் (வ.15-16).

ஆமோஸ் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்வது போல், நாமும் தேவனைச் சார்ந்து, அவரைத் தேடி, நன்மை செய்வோம், அதனால் நாமும் அவருடைய நன்மையை அனுபவிப்போம். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நன்மை செய்யும்போது, நம்முடைய மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளைக் கூட அவர் அற்புதமாக மாற்றுவார் (ஆதியாகமம் 50:20). உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், நினைவில் கொள்ளுங்கள்: தேவனில் இன்னும் நம்பிக்கை உண்டு.

 

தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார்

நான் நினைவுகளுக்காக சேமித்தவற்றின் பெட்டியைத் திறந்து, பத்து வாரக் கருவில் இருக்கும் குழந்தையின் கால்களின் சரியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு சிறிய, வெள்ளி சட்டகத்தை வெளியே எடுத்தேன். பத்து சிறு கால்விரல்களைத் தடவியபடியே, எனது முதல் கருச்சிதைவையும், நான் “அதிர்ஷ்டசாலி, அவ்வளவாய் துன்பப்பட வேண்டியதில்லை” என்று சொன்னவர்களையும் நினைவு கூர்ந்தேன். என் வயிற்றில் ஒருமுறை துடித்த இதயம் போல என் குழந்தையின் பாதங்கள் உண்மையானவை என்பதை அறிந்து நான் துக்கமடைந்தேன். என்னை மனச்சோர்விலிருந்து விடுவித்ததற்காகவும், குழந்தையை இழந்து வருந்தும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் எனது கதையைப் பயன்படுத்தியதற்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் கருச்சிதைவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நானும் என் கணவரும் இழந்த குழந்தைக்குக் காய் என்று பெயரிட்டோம், சில மொழிகளில் “மகிழ்ச்சி” என்று பொருள். எனது இழப்பால் நான் இன்னும் வேதனைப்பட்டாலும், என் இதயத்தைக் குணப்படுத்தியதற்காகவும், மற்றவர்களுக்கு உதவ எனது கதையைப் பயன்படுத்தியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.

107-ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய மாறாத தன்மையால் களிகூர்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.” (வ.1). “கர்த்தரால்.. மீட்கப்பட்(டவர்கள்)டு” “அப்படிச் சொல்லக்கடவர்கள்” (வ. 2 ,3), “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக” (வ. 9) என்று அவர் வலியுறுத்தினார். தேவன் ஒருவரே “தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று” (வ. 8) என்ற வாக்குத்தத்தத்துடன் அவர் நம்பிக்கை அளித்தார்.

கிறிஸ்துவின் சிலுவை பலியின் மூலம் மீட்கப்பட்டவர்களாயினும் கூட, துக்கத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எவரும் தப்ப இயலாது. எவ்வாறாயினும், தேவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்க முடியும், ஏனெனில் அவர் நம் கதைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை தமது மீட்கும் அன்பிற்கு நேராய் நடத்துகிறார். 

 

கிறிஸ்துவைப்போல ஒரு மறுஉத்தரவு

சந்தோஷ், கரோலினாவின் கோடை வெயில் உஷ்ணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் வசித்த ஒருவர் அவர் வேலை செய்து கொண்டிருந்த முற்றத்திற்குச் சென்றார். தெளிவாகக் கோபமாக, அண்டை வீட்டுக்காரர் கட்டிடத் திட்டத்தைக் குறித்தும், அது செய்யப்படுகிற விதம் குறித்தும் அனைத்தையும் குறைவாக பேசி, சபிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கினார். கோபமான பக்கத்து வீட்டுக்காரர் கத்துவதை நிறுத்தும் வரை சந்தோஷ் பதில் சொல்லாமல் வாய்மொழியின் அடிகளைப் பெற்றுக்கொண்டாா். பின்னர் அவர் மெதுவாக, “உங்களுக்கு இன்று மிகவும் மோசமான நாள், இல்லையா?” என்று பதிலளித்தார். திடீரென்று, கோபமடைந்த அண்டை வீட்டாரின் முகம் மென்மையாகி, அவரது தலை குனிந்து, “நான் உங்களிடம் பேசிய விதத்திற்காக வருந்துகிறேன்” என்றார். சந்தோஷின் அன்புச்செயல் அண்டை வீட்டாரின் கோபத்தைத் தணித்தது.

நாம் திருப்பித் தாக்க விரும்பும் நேரங்கள் உண்டு. வையப்படுகையில் வையவும், அவமானத்திற்கு அவமானப்படுத்தவும் விரும்புகின்றோம். அதற்கு மாறாக நம்முடைய பாவங்களின் விளைவுகளை இயேசு தாங்கியதைப் போல மிகச் சரியாகக் காணப்பட்ட கருணையையே சந்தோஷ் முன்மாதிரியாகக் காட்டினார், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:23).

நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் அல்லது தவறாகத் தாக்கப்படும் தருணங்களைச் சந்திப்போம். நாம் அன்பாகப் பதிலளிக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இயேசு நம்மை அன்பாக இருக்கவும், சமாதானத்தைத் தொடரவும், புரிதலைக் காட்டவும் அழைக்கிறாா். இன்று அவர் நமக்கு உதவுவதால், மோசமான நாளைத் கடக்கும் ஒருவரை ஆசீர்வதிக்கத் தேவன் நம்மைப் பயன்படுத்தக்கூடும்.